நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி சார்பில் திருக்குறள் வாரத் தொடக்க விழா!

X
Namakkal King 24x7 |18 Dec 2025 8:59 PM ISTதிரைப்படங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ள திறத்தைத் தன் இனிமையான குரல் வளத்தால் பாடி மாணவிகளின் மனத்தில் பதிவு செய்த விதம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
திருக்குறள் மனித வாழ்வில் இன்றியமையாத கொள்கைகளை இரண்டு அடியில் சொல்கிறது. உலக பொதுமறையான இது உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.அறம், பொருள், காமம் என வாழ்வியலை பிரித்து நெறியோடு வாழ்வில் ஒத்து போகும் இந்த குறள் தனித்துவம் வாய்ந்தது.கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழ்நாடு அரசு - உயர்கல்வித்துறை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா மற்றும் திருக்குறள் வாரத் தொடக்க விழா நாமக்கல் பாவலர் முத்துசாமி கலையரங்கத்தில் நடைபெற்றது. அக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும் (பொ) இணைப் பேராசிரியருமான முனைவர் சு. சுகன்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி தலைமையில் மூத்தப் பேராசிரியர்கள் முனைவர் செ.அலெக்சாண்டர் மற்றும் வி. எமீமாள் நவஜோதி வாழ்த்துரை வழங்கினர். சிறப்புப் பேச்சாளரை தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் பி.விஜயராணி அறிமுகம் செய்தார்.விழாவின் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி .கந்தசாமி "குறளின் மேன்மை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.இதில் திருக்குறள் பிரிவுகளான அறம், பொருள், இன்பம் என்ற பிரிவுகளில் வள்ளுவர் எழுதிய மனத்துக்கண் மாசிலன் ஆதல், தெய்வத்தால் ஆகாதெனினும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்ற குறட் கருத்துக்களை மேற்கோள் காட்டியதுடன் வள்ளுவர் தமிழ் மொழியின் முதன்மை எழுத்தான 'அ'கரத்தில் தொடங்கி, இறுதி எழுத்தான 'ன' கர ஒற்றில் நிறைவு செய்துள்ளமையையும் சுட்டிக்காட்டிப் பேசினார். திரைப்படங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ள திறத்தைத் தன் இனிமையான குரல் வளத்தால் பாடி மாணவிகளின் மனத்தில் பதிவு செய்த விதம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இறுதியில் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் ப. கௌரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள் செய்து இருந்தனர்.ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
