அறந்தாங்கி அரசு கல்லூரியில் மகளிர் உடல்நலம் மற்றும் மனநலப்பயிற்சி முகாம்!!

அறந்தாங்கி அரசு கல்லூரியில் மகளிர் உடல்நலம் மற்றும் மனநலப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியத்தின் சார்பில், கல்லூரி மாணவியருக்கான உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த பயிற்சி முகாம், கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்களின் வழிகாட்டுதல்படி, கல்லூரி நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு. அன்பழகன் அவர்கள் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் ஆவுடையார் கோயில் ஒன்றிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார வள அலுவலர் மு.ஜெயந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகபங்கேற்று, மாதவிடாய் சுகாதார மேலாண்மை மற்றும் மன நலம் குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாமில் வட்டார வள பயிற்றுநர் சா.மலர்ச்செல்வி, கிராமாலாயா நிறுவன பயிற்றுநர் சு.பழனிச்செல்வி ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். முகாமில் கல்லூரி அனைத்துத்துறை மாணவியர் 450 மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். கல்லூரி மனநல மேம்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், கணினி அறிவியல் துறைப்பேராசிரியருமான வை.சண்முகப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.நிறைவாகக் கல்லூரி முதுநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஆர்.ரமா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைப்பேராசிரியை வே. வாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
