கும்மிடிப்பூண்டி : பெரியபாளையம் அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சிறையில் அடைப்பு.

X
Gummidipoondi King 24x7 |20 Dec 2025 1:10 PM ISTபெரியபாளையம் அருகே கொலை மிரட்டல்.
கும்மிடிப்பூண்டி - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்விக்னேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் வடமதுரை கூட்டுச்சாலை, பனப்பாக்கம், கன்னிகைப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர். கன்னிகைப்பேர் சர்ச் அருகே போலீசார் ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். மேலும், அவ்வழியே சென்ற லாரி மற்றும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை வழிமறித்து அடித்து உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசார் அந்த வாலிபரை எச்சரிக்கை செய்து வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். ஆனால், அந்த வாலிபர் கன்னிகைப்பேர் கிராமத்தில் நான் எவ்வளவு? பெரிய ரவுடி தெரியுமா! எனக்கே அட்வைஸ் செய்கிறீர்களா. உங்களையும் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று தனது கையில் இருந்த கத்தியை சாலையில் உரசி தீப்பொறி ஏற்படும் வகையில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கன்னிகைப்பேர் கிராமம், சின்ன காலனி, மெயின் ரோட்டில் வசித்து வரும் ஸ்டீபன் (35) என்பது தெரியவந்தது. இந்த வாலிபர் மீது திருட்டு, கொலை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. எனவே, அந்த வாலிபரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபப்பி தலைமையில் போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர், அவரது உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு புழல் மத்திய சிறையில் அடைத்தனர். போலீசாருக்கு கொலை குற்றவாளி ஒருவர் மிரட்டல் விடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)
Next Story
