வளையபட்டியில் சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு மலைக்குன்றுகள், நீரோடைகள், விவசாய நிலங்களை மறைத்து சிப்காட் அமைக்க முயற்சி தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்குட்பட்ட வளையபட்டி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய 4 ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அதற்கு உண்டான 806.29 ஏக்கர்களை கையகப்படுத்த மாவட்ட சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 482.32 ஏக்கர் பட்டா நிலங்களும், 323.97 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் வேலை செய்து வருகின்றன.இதில் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியில் உள்ள விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று நிலத்தை கையகப்படுத்த வருவாய்துறையினர் போலீசார் உதவியுடன் வளையபட்டி, அரூர் பகுதியில் உள்ள நிலங்களை அளவீடும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலத்தை அளவிடும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் நிலத்தை அளவீடு செய்ய முடியாததால் அங்கிருந்து சென்றனர்.இந்த நிலையில் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு அலுவலகத்தில் வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். மலைக்குன்றுகள், நீரோடைகள், விவசாய நிலங்களை மறைத்து சிப்காட் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கின்றீர்கள் எனவே சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றனர்.

Next Story