திருச்செங்கோட்டில் சேலம் மண்டல அளவிலான தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் அலுவலர் களுக்கான விளையாட்டுப் போட்டி

X
Tiruchengode King 24x7 |30 Dec 2025 10:50 PM ISTதிருச்செங்கோட்டில் சேலம் மண்டல அளவிலான தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் அலுவலர் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிருஷ்ணகிரி மாவட்ட அணி வீரர்களுக்கு சேலம் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இணை இயக்குநர் கல்யாண் குமார் பரிசுகளை வழங்கினார்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் கல்லூரி வளாகத்தில் சேலம் மண்டல அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 35 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 170 தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நீர் செல்லும் குழாய்களை சுற்றி வைப்பது, ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல், கைப்பந்து போட்டி, கூடைப் பந்து போட்டி, நீச்சல் போட்டி, இறகுப்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்ட அணி தட்டி சென்றது. 2வது இடத்தை நாமக்கல் மாவட்டமும், 3வது இடத்தை சேலம் மாவட்டமும் பெற்றது.இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசுகளை சேலம் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இணை இயக்குனர் கல்யாண்குமார் வழங்கி பாரட்டினார். இது குறித்து மண்டல இணை இயக்குனர் கல்யாண் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சேலம் மண்டல தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவர்கள் தங்கள் தனித்திறமைகளையும் குழு திறமையும் காட்டி பரிசுகள் பெற்றுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் மாவட்டம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் என்று கூறினார். மலைப் பாங்கான பகுதியில் தீ பிடித்துக் கொண்டால் தீயை அணைக்க நவீன வாகனங்கள் உள்ளதா என கேட்டதற்கு புதியதாக கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு நவீன ரக வாகனம் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மலைகளில் தீப்பற்றினால் அதனை அணைக்க முடியும் மேலும் 373 கோடி ரூபாய் அளவிற்கு தீயணைப்பு துறைக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு ம. முதற்கட்டமாக 11 கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது. தற்போது இரண்டாவது கட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் நவீன உபகரணங்கள் வாங்க பரிந்துரைகள் செய்யப்படும். அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என கூறினார். அதேபோன்று திறமையாக செயல்படும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வட்டார அளவிலான நிலையை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் காவல்துறை சார்பாக நடைபெற்ற பேண்ட் இசை நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஒரு சில மாவட்ட தீயணைப்பு அலுவலர்களும் வீரர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர்.
Next Story
