வெண்ணந்தூரிலேயே பட்டா மாற்றி வழங்கக் கோரி தாசில்தாரிடம் மனு..

வெண்ணந்தூரிலேயே பட்டா மாற்றி வழங்கக் கோரி தாசில்தாரிடம் மனு..
X
வெண்ணந்தூரிலேயே பட்டா மாற்றி வழங்கக் கோரி தாசில்தாரிடம் மனு..
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தங்கசாலை பகுதி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 19 அருந்ததியர் குடும்பங்களுக்கு, சொந்த பகுதியில் லேயே பட்டா வழங்க வேண்டும் என ராசிபுரம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட தங்கசாலை பகுதி அருந்ததியர் தெருவில், வாடகை வீடுகளில் வசித்து வந்த ஏழை எளிய அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 19 குடும்பங்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழ் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக, தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம், இக்குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது. ஆனால், வெண்ணந்தூர் பகுதியில் இடமில்லை, சிவநாய்க்கன்பட்டியல் தான் இடம் வழங்க முடியும் எனக் கூறி தலா 2 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்கினர். பட்டா வழங்கப்பட்ட சிவநாயக்கன்பட்டி பகுதியில் வேலைவாய்ப்புகள் மற்றும் குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, முன்பு வசித்து வந்த வெண்ணந்தூர் தங்கசாலை அருந்ததியர் தெருவை ஒட்டிய பகுதியில் அல்லது வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட எல்லைக்குள், 19 அருந்ததியர் குடும்பங்களுக்கும் பட்டாவை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் சு. அகத்தியன் , அவர்கள் தலைமையில் ராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார் அவர்கள் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story