கள்ளக்குறிச்சி: ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாததால் ! விவசாயிகள் கவலை...

கள்ளக்குறிச்சி: ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாததால் ! விவசாயிகள் கவலை...
X
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கவலை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வடகிழக்குபருவமழை பெய்யாததால் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாமல் உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 211 ஏரிகள் உள்ளன. அதேபோல், ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் 381 ஏரிகள், குளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் அணைகள் நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அப்போது, ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும், அதை ஒட்டியவாறு உள்ள ஏரிகளும் நிரம்பும். இரண்டு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி 3 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பெஞ்சல் புயலால் பெரும்பாலான ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின. நடப்பாண்டும் அதிகளவு வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. மழை பொய்த்ததால் கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளில் குறைந்தளவு தண்ணீரே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கோமுகி அணையின் மொத்த கொள்ளளவான 46 அடி (560.96 மில்லியன் கன அடி) உயரத்தில் 38.70 அடி (352.68 மில்லியன் கன அடி) தண்ணீர் மட்டுமே உள்ளது. அதேபோல், சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளவான 36 அடி (736.96 மில்லியன் கன அடி) உயரத்தில், 18 அடி (38.73 மில்லியன் கன அடி) தண்ணீர் மட்டுமே உள்ளது. மணிமுக்தா அணை ஷட்டர் பழுது நீக்கும் பணியால் அதிகளவு தண்ணீர் சேமிக்கப்படவில்லை. இதுதவிர, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 211 ஏரிகளில், 62 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 8 ஏரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் உள்ளது. 30 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும், 83 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும், 28 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீரே இல்லை. இதனால், கோடைக்காலம் துவங்கும் முன்னரே நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. மேடான பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு போகும். கோடைக்காலத்தில் விவசாயம் பெருமளவு பாதிக்கும் சூழலும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் இருப்பதால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
Next Story