சுதந்திரத்திற்கு பின் போதமலைக்கு சாலை: நேரில் சென்று குறைகளை கேட்ட அமைச்சர், எம்.பி.,

X
Rasipuram King 24x7 |12 Jan 2026 8:16 PM ISTசுதந்திரத்திற்கு பின் போதமலைக்கு சாலை: நேரில் சென்று குறைகளை கேட்ட அமைச்சர், எம்.பி.,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இந்த மலையில் கீழூர், மேலுார் மற்றும் கெடமலை ஆகிய கிராமங்கள் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன போதிலும், இந்த மலை கிராமங்களுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லவும், பல கிலோ மீட்டர் துாரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்லும் அவல நிலை இருந்தது. குறிப்பாக, நோயாளிகளை டோலி கட்டி சுமந்து செல்லும் நிலை இருந்து வந்தது. இந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தி.மு.க., அரசு சார்பில் போதமலைக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த புதிய சாலை வழியாக, நேற்று கெடமலை கிராமத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எம்.பி., ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் அமைச்சர் மற்றும் எம்பி ராஜேஸ்குமார் ஆகியோர் கலந்துரையாடினர். தொடர்ந்து, மக்களின் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் ஆத்மா குழு தலைவர் ஆர். எம் .துரைசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
