குளித்தலையில் திருவிழா நடத்த சென்ற மக்களை தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு

சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சியில் உள்ள மாலைமேடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொம்முசாமி மாலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு மாடு மறிக்கும் திருவிழா மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் விழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் வெவ்வேறு நேரங்களை காவல்துறை ஒதுக்கீடு செய்து வழிபட்டனர். இது சம்மந்தமாக சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்த ஆண்டிற்கான தை மாத திருவிழா நடத்துவதற்கு கோபால் தரப்பினரும், சின்னபொம்மாநாயக்கர் தரப்பினரும் முடிவு செய்ததாக தெரிகிறது. இதில் சின்னபொம்மநாயக்கர் தரப்பினர் பொம்முசாமி மாலையம்மன் கோவில் வழிபடுவதற்கு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் அனுமதியும் பெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த கோவிலுக்கு பயன்படுத்தி வந்த பாதை அனைத்தும் தனியார் பட்டா நிலத்தில் உள்ளதாக தெரிவித்து அதன் உரிமையாளர்கள் சிலர் முற்களை கொண்டு அடைத்து உள்ளனர். இதனை அறிந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனை அடுத்து வழக்கம் போல் இன்று சின்னபொம்மாநாயக்கர் தரப்பினர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையின் உத்தரவுபடி, கள்ளை பொம்முசாமி மாலைகோவிலுக்கு வழிபாடுகள் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக குப்பமேட்டுப்பட்டி மக்களை நேற்று தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சின்னபொம்மாநாயக்கர் தரப்பினருக்கும் போலீசாருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீறி சென்றால் கைது செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் கோவிலுக்கு செல்லவிடாமல் தடுத்ததால் சின்னபொம்மாநாயக்கர் தரப்பினர் திரும்பி சென்றனர். தொடர்ந்து கள்ளை பொம்முசாமி மாலைகோவில் செல்லும் பாதை அருகிலும், குப்பமேட்டுப்பட்டி கிராமத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர்
Next Story