கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் முருகன் கோவிலில் தேரோட்டம் - தைப்பூச நாளில் கோலாகலம்...!

கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் முருகன் கோவிலில் தேரோட்டம் - தைப்பூச நாளில் கோலாகலம்...!
X
தேரோட்டத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி ,எருமப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பி.பாலு (எ) பாலசுப்ரமணியன், அறங்காவலர் குழுவினர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தைப்பூசத்தை யொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை யொட்டி தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா, மயில் வாகனம், காமதேனு, ரிஷபம், யானை போன்ற வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 11 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.
தேரோட்டத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி மற்றும் எருமப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் பி.பாலு (எ) பாலசுப்ரமணியன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கூலிப்பட்டி மலையை சுற்றி உள்ள கிரிவல பாதையில் பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் தேங்காய், பழம் வைத்து சாமியை பயபக்தியுடன் வழிபட்டனர்.இந்த தேரோட்டத்தை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர். தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி அங்கு கரும்பு விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.மலையை சுற்றி உள்ள மண்டபங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி தலைமையில் உறுப்பினர்கள் பழனிசாமி, வரதராஜன், நடராஜன்,மீனா,திமுக பொதுக்கழு உறுப்பினர் விமலா சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story