அமெரிக்க வரிக்குறைப்பு இந்திய ஏற்றுமதியாளர்களின் வேதனைக்கு முடிவு! -பிரதமருக்கு கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நன்றி

X
Namakkal King 24x7 |3 Feb 2026 9:38 PM ISTகடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த பொருளாதார சிக்கல்கள் தீரும், இழந்த அமெரிக்க சந்தையை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, அமெரிக்க வரிக்குறைப்பை சாத்தியமாக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்திய ஏற்றுமதியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
அமெரிக்காவுடனான நல்லுறவின் தொடர்ச்சியாக, இந்திய பொருள்களுக்கான வரி குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளதன் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்ட வேதனையிலிருந்து விடுபடுவார்கள் என, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான இ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு, அமெரிக்காவின் இந்த வரிக்குறைப்பு அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வியாபாரிகள், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் இந்த திடீர் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருந்த ஜவுளி தொழில்,கடந்த ஓராண்டாக முடங்கியதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை என அவர் குறிப்பிட்டார். தற்போது அமெரிக்காவின் வரிக்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து, புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடரும் சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இழந்த வேலை வாய்ப்புகள் மீண்டும் கிடைக்க தொடங்கினாலும், புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தவும், உற்பத்தியை தொடங்கவும் குறைந்தது ஆறு மாத காலம் தேவைப்படும் என்றும், ஜவுளி தொழிலில் வேலை இல்லாமல் வேறு துறைகளுக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவதற்கும் காலதாமதம் ஏற்படும் என்றும் அவர் கூறினார். எனவே, அமெரிக்காவுடனான வர்த்தகம் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஓராண்டு காலம் ஆகும் என அவர் மதிப்பிட்டார்.அமெரிக்காவின் நேற்று இரவு வெளியான வரிக்குறைப்பு அறிவிப்பு, இந்திய ஏற்றுமதிக்கு புதிய ஒளியை பிறப்பித்துள்ளதாக கூறிய இ.ஆர்.ஈஸ்வரன், இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும், அதே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்த பொருளாதார சிக்கல்கள் தீரும் என அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார். இழந்த அமெரிக்க சந்தையை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, அமெரிக்க வரிக்குறைப்பை சாத்தியமாக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்திய ஏற்றுமதியாளர்கள் சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிப்பதாக இ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
Next Story
