சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயம்

X
சிவகங்கைமாவட்டம், சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயமானதாக ஒன்றியக் கூட்டத்தில் துணைத் தலைவர் கேசவன் புகார் தெரிவித்தார். சிவகங்கை ஒன்றியக் கூட்டம் தலைவர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கண்ணன், அருண்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் கவுன்சிலர் (திமுக) பத்மாவதி பெரியாறு பாசன 48-வது மடைக் கால்வாய் மூலம் அழகமாநகரி, நாமனூர் உள்ளிட்ட பகுதிகள் பயன் பெற்று வருகின்றன. ஆனால் இக்கால்வாயில் முறையாக தண்ணீர் திறப்பதில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வார்டுகளுக்கு பாரபட்சமாக நிதி ஒதுக்கப்படுகிறது என்றார். துணைத் தலைவர் கேசவன் (அதிமுக) நிதி சமமாகத் தான் ஒதுக்கப்படுகிறது. சிவகங்கை ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, கட்டப்பட்டு வருகிறது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை ஒப்பந்ததாரர் இடிக்காமல், பொது நிதி செலவழிக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இருந்த பொருட்கள், வெட்டப்பட்ட பழமையான மரங்கள் என ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மாயமாகி உள்ளன என்று பேசினார்.
Next Story

