பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கடத்தல் கும்பலை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில், டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து வரும் பஸ், வேன், சொகுசு பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்த தொடங்கினர். பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சொகுசு பஸ்சை கொண்டலாம்பட்டி பகுதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் பஸ் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் பஸ்சுக்குள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் பஸ்சின் பயணிகள் இருக்கைக்கு கீழ் பகுதியில் பெட்டி உள்ளிட்ட உடைமைகள் வைக்கப்படும் இடத்தில் சோதனை நடத்தினர். அதில் 5 சாக்கு மூட்டைகள் இருப்பது தெரிந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. பின்னர் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், அவருடன் வந்த மற்றொரு டிரைவர் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தென்காசி மாவட்டம் சிவராமன்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பிரேம்குமார் (வயது 29), தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்த சங்கர் மகன் சரவணகுமார் (27) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 115 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மற்றும் அந்த பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

