இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1லட்சம் ரொக்கம்

கீழையூர் ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில், முன்னாள் எம்எல்ஏ வீ.தம்புசாமி 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி முன்னிலை வகித்தார். சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீ.எஸ்.மாசேதுங் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகை எம்பியுமான வை.செல்வராஜ், சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், சிபிஐ முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்சி வளர்ச்சி நிதியாக முதற்கட்டமாக ரூ.1லட்சம் ரொக்கத்தை சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் நாகை எம்பி வை.செல்வராஜிடம் வழங்கினார். பின்னர் எம்பி பேசியதாவது தமிழக மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளதோடு, மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது. இருமொழிக் கொள்கையே போதுமானது. ஹிந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதனை காரணம் காட்டி தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மறுப்பது ஏற்புடையது அல்ல என்பதால் நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன். மேலும், தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, முன்னாள் எம்எல்ஏ வீ.தம்புசாமி திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மழைத்துளி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீ.சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன், விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராமலிங்கம், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், எட்டுக்குடி கிளைச் செயலாளர் கே. ஜெயராமன் நன்றி கூறினார்.
Next Story