சேலம் சூரமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் குட்கா போலீசார் பறிமுதல்

X
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடைக்கு சூரமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி இருசாகவுண்டர் (வயது 55) என்பவர் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கடையின் உரிமையாளர் மூலம் இருசாகவுண்டரை தொடர்பு கொண்டு குட்கா கொண்டு வருமாறு கூறினர். அதன்பேரில் இருசாகவுண்டர், காரில் குட்கா கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்து சூரமங்கலத்தில் குடோனில் பதுக்கி வைத்து மாநகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்ததும், குட்கா வியாபாரி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த குடோனுக்கு சென்று அங்கிருந்த 1 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

