மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு...

கடற்பசு பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தஞ்சாவூரில் வியாழக்கிழமை தமிழக வனத்துறை சார்பில் கடற்பசு பாதுகாப்பு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்துக்கு வந்தவர்களை மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராஜம், புதுச்சேரி பல்கலைக் கழக சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிரலங்கில், மத்திய அறிவியல் துறையின் தேசிய கடற்கரை ஆய்வு மைய திட்ட விஞ்ஞானி ருக்மினி சேகர் பேசியது: உலகில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவில் மட்டும் இந்த கடற்பசு வாழ்கிறது. இந்த அரிய வகை கடல் பசு இந்தியாவில் குஜராத், அந்தமான், தமிழ்நாடு ஆகிய இடங்களில் கடலில் வாழ்விடத்தை கொண்டுள்ளது. தமிழகத்தில் பாக் ஜலசந்தி பகுதியில் கடற்கரையை ஓட்டிய கடலில் வாழும் இந்த கடற்பசு குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் அதிகம் உள்ளது. சுமார் 200 எண்ணிக்கையில் இந்த கடற்பசுக்கள் வாழ்கிறது. அரிய வகை பாலுட்டி இனமான இந்த கடற்பசு அழிந்து வரும் நிலையில் உள்ளதால், இதனை பாதுகாக்க தமிழக அரசு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. அதற்காக மனோரா பகுதியில் கடற்பசு பாதுகாப்பு மையத்தினை ஏற்படுத்தி வருகிறது. கடற்பசு பாதுகாப்பு தொடர்பாக மீனவர்கள், பொதுமக்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் மீனவர்கள் வலையில்பிடிபடும் இந்த கடற்பசுவை பத்திரமாக மீண்டும் கடலில் மீனவர்கள் விடுவது வரவேற்க கூடியது.  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 15 கடற் பசுக்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது. ஒரு கடற் பசுவை பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டால், 100 கடற் பசுக்களை பாதுகாத்தமைக்கு நிகராகும். கடற் பசுக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரே ஒரு குட்டிகளை ஈனும். இதனால் தான் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த கடற் பசு கடல்புற்களை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. இந்த பாலூட்டி மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காது. கடற்பசுக்கள் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் மாட்டும் போதும், இயந்திர படகுகளில் மோதும் போதும் அவை உயிரிழந்துவிடும். அதே போல் கடற்புற்கள் இல்லாமல் இருந்தால் அவை வேறு இடத்துக்கு சென்று விடும். எனவே, மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது, வலையில் சிக்கும் கடற்பசுக்களை அதிக நேரம் வலையில் வைத்திருக்காமல் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவற்றை பத்திரமாக கடலில் விட வேண்டும். கடற்பசுக்களை பத்திரமாக விடும் மீனவர்களுக்கு அரசு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மீனவர்கள் கடலில் வசிக்கும் இந்த அரியவகை பாலுட்டி இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்" என்றார். பயிலரங்கில் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் மற்றும் கொள்ளுக்காடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர் குழுக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்பசுக்கள் மீன்பிடி வலையில் சிக்கியதால், அவற்றை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில், வனச்சரக அலுவலர்கள் ஏ.எஸ்.சந்திரசேகரன் (பட்டுக்கோட்டை) , ரஞ்சித் (தஞ்சாவூர்), கடலோரப் பாதுகாப்புக் குழும டிஎஸ்பி முருகன், ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், வனத்துறை அலுவலர்கள், மீனவர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story