சேலத்தில் 1¼ டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

சேலத்தில் 1¼ டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
X
இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிலர் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து சேலம் மாநகரில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் செவ்வாய்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேர்வீதி வழியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்தபோது, அதற்குள் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட 1,300 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து காருக்குள் இருந்த கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த லிங்கராஜ் (வயது 38), முத்துக்குமார் (33), வெங்கடேஷ் (40), ஓமலூரை சேர்ந்த அஜித் (51), சேலத்தை சேர்ந்த மோகன் (47), சூரமங்கலம் ரெட்டியூரை சேர்ந்த சுல்தான் (25), பெங்களூருவை சேர்ந்த சம்பலால் (28) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கார்களில் கடத்தி வந்து சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1,300 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு தலைமறைவாக இருக்கும் சுரேந்தர்சிங் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story