சேலம் அருகே முட்டை லாரி கவிழ்ந்து 1½ லட்சம் முட்டைகளும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.

போலீசார் விசாரணை
சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து 1½ லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஒரு லாரி சென்னைக்கு புறப்பட்டது. லாரியை டிரைவர் ராமச்சந்திரன் ஓட்டி சென்றார். சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பின்னால் வந்த மற்றொரு லாரி, முட்டை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் முட்டை லாரி தேசிய நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த முட்டைகள் முழுவதும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர். தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் சில மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக முட்டை ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story