கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

X
குரும்பூர் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் ஊராட்சி வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் சுடலை(42). இவர் மயிலோடை சாலையில் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறார். கடந்த 22ஆம் தேதி கடையை திறப்பதற்காக வந்த அவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருள்களை காணவில்லையாம். இதுகுறித்து சுடலை, குரும்பூர் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், மீண்டும் 27ஆம் தேதி அதே கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ், ஆம்பிளிபயர், வயர்ரோல் போன்றவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்த தொடர் திருட்டு குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். பைக் திருட்டு: தூத்துக்குடி தருவைக்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் இசக்கிசுந்தர்(21). குரும்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் இவர் தனது பைக்கை அங்கமங்கலம் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

