மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 6 ஆயிரத்து 434 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்

மக்களை தேடி மருத்துவத் திட்டம்
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4-ம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 115 மருத்துவ பணியாளர்களுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப் போது கலெக்டர் பேசுகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பல்வேறு மருத்துவ சேவைகள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 434 பயனாளிகள் பல் வேறு வகையான சேவைகளை பெற்று பயன்பெற்றுள்ளனர். என்றார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப் குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story