லிப்ட் பழுதினால் மரணம்: ரூ.10 இலட்சம் வழங்க ஆணையம் உத்தரவு!

லிப்ட் பழுதினால் மரணம்: ரூ.10 இலட்சம் வழங்க ஆணையம் உத்தரவு!
ஹோட்டல் லிப்ட் பழுதினால் மரணம் அடைந்தவரின் மகனுக்கு ரூபாய் 10 இலட்சத்து 10 ஆயிரம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவரது தந்தை மாடசாமி; என்பவர் வண்ணார்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக மேல்பகுதிக்கு அங்குள்ள லிப்டில் ஏற முயன்றுள்ளார். லிப்டின் கதவினை திறந்த போது அங்கே லிப்ட் இல்லாமல் இருந்துள்ளது. அதனால் லிப்ட் பள்ளத்தின் உள்ளே விழுந்து தரை தளத்தில் விழுந்து விட்டார். சுமார் 10 அடிக்கு கீழே விழுந்ததில் மாடசாமிக்கு உடலில் பல பகுதிகளில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விட்டார். மேற்படி லிப்ட்டுக்கு அருகில் லிப்;ட் உதவியாளர் யாரும் இல்லை. மயங்கிய நிலையில் மாடசாமியை பள்ளத்தில் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஹைகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பெருமாள்புரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்;துள்ளனர். 10 நாட்களுக்கு பின்பு அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மையால் மரணமடைந்து விட்டார். சரியான முறையில் லிப்ட்டை பராமரிக்காததால் லிப்ட் பழுதானதற்கு ஹோட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணமாகும். இதையடுத்து இறந்து போன மாடசாமியின் மகன் சீனிவாசன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10 இலட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10 ,000 ஆக மொத்தம் ரூபாய்; 10 இலட்சத்து 10 ஆயிரத்தை இரு மாத காலத்திற்குள்; வழங்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 மூ வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.
Next Story