வெள்ளாற்று பாலத்துக்கான இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10}இல் சாலை மறியல்

X
அரியலூர், மார்ச் 10: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இருப்பக்கமும் பல ஆண்டுகளாக கிடப்பிலுள்ள இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். கோட்டைக்காடு அருகே கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளாற்றுப் பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாறியதையடுத்து, பாலத்துக்கான இணைப்புச் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.இதையடுத்து இந்த இணைப்புச் சாலைப் பணிகளை தொடங்க வலியுறுத்தி போராட்டக் குழுவினர் வலியுறுத்தியதின் பேரில் 10.3.2025 அன்றுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் 40 சதவீதம் பணிகள் கூட நிறைவேறாத நிலையில், கோட்டைக்காட்டில், போராட்டக் குழு தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் போராட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலர் முடி மன்னன், பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் ஆடியபாதம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு தலைவர் பாலசிங்கம், ஆலத்தியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சாந்தி ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மேற்கொண்ட ஆலோசனையில், பாலத்துக்கான இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10 ஆம் தேதி காலை முள்ளுக்குறிச்சியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்தனர்.
Next Story

