சேலம் மாநகராட்சியில் ரூ.10 கோடியில் சீரமைக்கப்பட்ட அல்லிக்குட்டை ஏரி

X
சேலம் மாநகராட்சி அல்லிக்குட்டை ஏரியை மறுசீரமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.10 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் அல்லிக்குட்டை ஏரியை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதையொட்டி அல்லிக்குட்டை ஏரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், துணை மேயர் சாரதாதேவி உள்பட மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏரியை பார்வையிட்ட பின்னர், முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- அல்லிக்குட்டை ஏரியானது சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை வார்டு அலுவலக பகுதியில் 23.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் கரையின் நீளம், நடைபாதை, மும்முனை சுவர், சாய்தள சுவர், சங்கிலி இணைப்பு வேலிகள், மின்விளக்குகள், சுகாதார வளாகம், மதகு மடைவாய், மாற்றுக்கால்வாய், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு அல்லிக்குட்டை ஏரி தூர்வாரப்பட்டுள்ளது. அல்லிக்குட்டை ஏரி புனரமைக்கப்பட்டதன் மூலம் ஏரியின் நீர் பரவல் பகுதி அதிகரிக்கப்பட்டதோடு, ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீர், நிலத்தடி நீர் மாசுபடுவது தடுக்கப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் விவசாயம் உற்பத்தி பெருக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Next Story

