ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

X
நாகை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம் வட்ட மாநாடு, வட்டக் கிளைத் தலைவர் எம்.எம்.காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. வட்ட துணைத் தலைவர் வி.பூபதி வரவேற்றார். மாவட்ட தலைவர் ஆ.நடராஜன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளர் என்.பாபுராஜ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். விவாதங்களுக்கு பின்னர் அறிக்கைகள் ஏற்கப்பட்டன. வட்ட நிர்வாகிகள் சி.ராஜேந்திரன், எம்.ஜெயராஜ் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், வட்டத் தலைவராக கே.இராஜூ, துணைத் தலைவர்களாக ஜி.காளிமுத்து, எஸ்.வாசு, சி.ராஜேந்திரன், செயலாளராக வி.மாரிமுத்து, இணைச் செயலாளர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.மணியன், எம்.ஜெயராஜ், பொருளாளராக என்.பாபுராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கிருஷ்ணசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.இராஜூ, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் எம்.பி.குணசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சு.சிவகுமார் நிறைவுரையாற்றினார். 1984-க்கு பின்னர் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கமுடேசன் தொகையை ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து பெற உரிய அனுமதியை அரசு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம பெறும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.150-ஐ பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். காரைக்காலிலிருந்து திருநள்ளாறு மற்றும் பேரளம் வழியாக மயிலாடுதுறைக்கு தொடர்வண்டி இருப்புப்பாதை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், மின்சார சிக்கனம், நேர சேமிப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, வேளாங்கண்ணியிலிருந்து நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாக சென்னைக்கு தொடர் வண்டிகள் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வேயை கேட்டுக்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வட்ட இணைச் செயலாளர் எஸ்.மணியன் நன்றி கூறினார்.
Next Story

