கரூர்-ஆணவக் கொலை- திடீர் மறியல் போராட்டம்.10 பேர் கைது.

கரூர்-ஆணவக் கொலை- திடீர் மறியல் போராட்டம்.10 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கவின் தூத்துக்குடி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பாளை கே.டி.சி. நகரை சேர்ந்த சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால், அவர் பழகுவது அந்த பெண்ணின் சகோதரரான பட்டதாரி வாலிபர் சுர்ஜித்(24) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பலமுறை கவின் செல்வகணேசிடம் எச்சரித்த நிலையில், அவர் கேட்கவில்லை என்பதால் அண்மையில் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து சுர்ஜித், கவினை வெட்டிக்கொலை செய்தார். இந்த வழக்கில் சுஜித் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் தமிழர் எழுச்சி கழகம் சார்பாக அமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழர் எழுச்சி கழக அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கரூர் நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story