ஆண்டுக்கு 10 லட்சம் பனை விதை குமாரபாளையம் விவசாயி உறுதி

X
Komarapalayam King 24x7 |10 Oct 2025 5:31 PM ISTஆண்டுக்கு 10 லட்சம் பனை விதை வழங்குவது என் இலக்கு என கலெக்டரிடம் குமாரபாளையம் விவசாயி உறுதி கூறினார்.
மாநில நாட்டு நலப்பணித்திட்டம் குழுமம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நாமக்கல் மாவட்டம் சார்பாக 6 கோடி பனைவிதைகள் நடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே வல்வில் ஓரி நண்பர்கள் குழுவினர், சமூக ஆர்வலர்கள், பங்கேற்று பனை விதைகளை சேகரித்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் கூட்ட அரங்கில் நடந்தது. குமாரபாளையத்தில் கடத்த ஆண்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் சாதனை செய்த விவசாயி விஸ்வநாதன், சமூக ஆர்வலர்கள் சித்ரா, உஷா, மல்லிகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் இவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். இதில் விஸ்வநாதன் பேசியதாவது: ஆண்டுக்கு 10 லட்சம் பனை விதைகள் தர வேண்டும் என்பது என் குறிக்கோள். தற்போது ஒரு லட்சம் பனை விதை இலவசமாக கொடுத்து வருகிறேன். பல ஊர்களில் இருந்து வாங்கி செல்கின்றனர். பனை விதைகளை சேகரிக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். மேலும் பூச்செடிகளுக்கு நர்சரி கார்டன் இருப்பது போல், பனை விதைகளை பாலிதீன் பைகளில் மண் கொட்டி அதில் பனை விதைகளை சேமித்தால், முளை விட்டு பனை மரங்கள் நடுவதற்கு உதவியாக இருக்கும். பனை சார்ந்த உணவு பொருட்கள் தயாரிக்கவும் அரசு சார்பில் உரிய பயிற்சி கொடுத்து, ஊக்குவித்தால், பல வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்ய முடியும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். பனையின் பெருமை உலகெங்கும் பரவ செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
