பல்லடத்தில் தவறவிட்ட 10 பவுன் நகைகள் ஒப்படைப்பு

பல்லடத்தில் தவறவிட்ட 10 பவுன் நகைகள் ஒப்படைப்பு
X
பல்லடம் பஸ் நிலையத்தில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சுவீனா (வயது 25). இவர், தனது தம்பி முகமது இர்பான் (17), பாட்டி சைனமா (65) ஆகியோருடன் கடந்த 29-ந் தேதி கோவையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக அரசு பஸ்சில் வந்தனர். பல்லடம் பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் சாப்பிட்ட பின்னர் திருப்பூர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த 2 பைகளை பஸ்நிலையத்தில் நேரக் காப்பாளர் அலுவலகம் முன்பிருந்த வாகனத்தின் மீது வைத்தபடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் செல்லும் பஸ் வந்ததால், அவசரமாகச் சென்றதில் ஒரு பையை மட்டும் எடுத்துவிட்டு மற்றொன்றை மறந்து சென்று விட்டனர். அந்த பையில் தங்க சங்கிலி, வளையல், கம்மல் என 10 பவுன் தங்க நகைகள் இருந்தது. இந்த நிலையில், பல்லடம் அரசு போக்கு வரத்துக் கழக நேரக்காப்பாளர் அலுவலகத்தில் பணி யாற்றி வரும் பழனிச்சாமி என்பவர், அவர்கள் தவறவிட்ட பையை எடுத்து பத்திரப்படுத்தினார். பின்னர் பஸ் நிலையத்திற்குள் வந்த ரோந்து போலீசாரிடம் விவரம் கூறி ஒப்படைத்தார். இதற்கிடையே திருப்பூர் சென்ற சுவீனா குடும்பத்தினர் நகைகள் வைத்திருந்த பையை காணாமல் அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்கள் மீண்டும் பல்லடம் வந்து நேரக்காப்பாளர் அலுவலகம் அருகே தேடினார்கள். அப்போது அவர்களது பை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விவரத்தை கூறி தவறவிட்ட பையைப் பெற்றுக்கொண்டு அரசு போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் பழனிச்சாமி மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.
Next Story