தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்ட பனைகள் எரிந்து சேதம்!
Thoothukudi King 24x7 |24 Sep 2024 9:13 AM GMT
தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதமாகின.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி தெற்கு தெருவில் உள்ள பனை மரங்களில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, தெர்மல் நகரில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் வேகம் அதிகரித்ததால், அருகிலுள்ள வீடுகளுக்கு பரவும் அபாயநிலை ஏற்பட்டது. இதுகுறித்து ஆட்சியருக்கு அவசர தகவலாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, ஆட்சியர் மாவட்ட தீயணைப்பு அலுவலரை தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, மற்றொரு தீயணைப்பு வாகனம் அனுப்பப்பட்டது. ஆனாலும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 4 தீயணைப்பு வாகனத்திலும் வந்த வீரர்கள், 2 மணி நேரமாக கடுமையாக போராடி இரவு 8.30 மணி அளவில் தீயை அணைத்தனர். இந்த தீயால், 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்த நிலையில், சுமார் 30 பனைகள் முற்றிலும் கருகி நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையே, உயிர்களை காப்பாற்ற வேண்டிய தீயணைப்பு வாகனங்கள், உயிரற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள் மிகவும் பழையதாக இருப்பதால், அவசர நேரங்களில் பயனற்று போய்விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய தீயணைப்பு வாகனங்கள் வாங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story