தஞ்சாவூரில், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
Thanjavur King 24x7 |22 Jan 2025 11:07 AM GMT
போராட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின், 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், புதன்கிழமை காலை, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கும்பகோணம் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு செயலாளர் எஸ்.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் சிறை நிரப்பும் போராட்டத்தினை துவக்கி வைத்துப் பேசினார். போராட்டத்தில், கடந்த 1..4.23 முதல் ஓய்வு பெற்றவர்களுடைய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். 95 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 109 மாதகால அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். விழாக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக் கூடாது. கழக பேருந்துகளை தனியாரிடம் குத்தகைக்கு விடக் கூடாது. ஓட்டுனர், நடத்துனர் உட்பட 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும். அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு பணி வழங்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மய நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் இரண்டு கோடி பயணிகளால் 7,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் மதியழகன், அரசு ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போராட்டக் குழு நிர்வாகிகள் பி.வெங்கடேசன், எஸ்.ராமசாமி, எஸ்.ஞானசேகரன், என்.பாஸ்கரன், எம்.ஜீவா, எஸ்.ராஜசேகரன், பி.கரிகாலன், எல்.சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்து பேர் கொண்ட போராட்டக் குழு வழி நடத்தியது. மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
Next Story