ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்டம்:100 அடி நீள தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

X
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நடவடிக்கை எடுத்தது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்து நேற்று சேலத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. காந்தி ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் வின்சென்ட், தொங்கும் பூங்கா, திருவள்ளுவர் சிலை வழியாக கோட்டை மைதானத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது பாரத மாத வேடமிட்டு சிறுமிகளும், 100 அடி நீளத்திற்கு தேசியக் கொடியை ஏந்தியும் வரப்பட்டன. மேலும் வாகனத்தில் அக்னி ஏவுகணை, ரபேல் விமான மாதிரிகளும் எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மைதானத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story

