கீழ்வேளுர் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் மழையால் பாதிப்பு
நாகை மாவட்டத்தில், இந்தாண்டு விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், பணப்பயிர் என அழைக்கப்படும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்புலியூர், செருநல்லூர், கூத்தூர், குருமணங்குடி, காக்கழனி, ஆந்தகுடி, திருப்பஞ்சனம், சிகார், பட்டமங்கலம், தேவூர், கொடியாலத்தூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 750 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அவ்வபோது பரவலாக பெய்த கோடை மழை காரணமாக, கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான பருத்திச் செடிகளை மழைநீர் சூழ்ந்ததால், பெரும்பாலான செடிகளில் பூக்கள் கொட்டியதால், அதன் மகசூல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகள், முதற்சுற்று பருத்தி காய்கள் வெளிவந்துள்ளன. இன்னும் சில நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலை வந்துவிடும். இந்நிலையில். பலத்த காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன. ஒரு சில இடங்களில் வெளிவந்த பஞ்சுகளும், மழையில் நனைந்து சேதமானது. மேலும். வலிவலம் வருவாய் சரகத்திற்குட்பட்ட கொடியாலத்தூர்,மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாகுபடி செய்துள்ள பருத்திக்கு வருவாய் துறையில் பதிவு செய்திருந்தாலும், இன்சூரன்ஸ் பதிவிற்கான இணையதள பக்கம் ஓப்பனாகாததால் இன்சூரன்ஸ் கிடைக்காது என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளததால், மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பை நடத்தி தமிழக அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story




