மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்

X
மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், நாம் இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாம் இயக்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் உதவி கலெக்டர் சுகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப கோரி கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.565 கோடி மதிப்பீட்டின் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை அப்போது அரசு தொடங்கியது. தற்போது 30 சதவீதம் அளவிற்கு மட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 70 சதவீதம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Next Story

