பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க வலியுறுத்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல்
நாகை மாவட்டத்தில், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி குறுவை இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழையூர் கடை தெருவில், நாகை- திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தில், மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சம்பந்தம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீ‌.சரபோஜி ஆகியோர் முன்னிலை வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், குறுவை இன்சூரன்ஸ் விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கனமழையால் சாய்ந்த சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பொங்கல் பரிசுத்தொகையுடன் ரூ.ஆயிரம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், வட்டாட்சியர் கவிதாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் வி.எஸ்.மாசேத்துங், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி.கண்ணையன், டி.பாலாஜி, ஜி. சங்கர், இந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எம்.பாப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story