சேந்தமங்கலம் தத்தகிரி முருகனுக்கு கொமதேக சார்பில் 1008 பால்குட அபிஷேகம்!

X
Namakkal King 24x7 |1 Feb 2026 8:11 PM ISTசேந்தமங்கலம் சோமேஸ்வரர் திருக்கோவிலில் தொடங்கி, பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலை வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கலந்து கொண்டனர். வழியெங்கும் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் முழங்கினர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அருள்மிகு தத்தகிரி முருகன் திருக்கோவிலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) சார்பில் 1008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் வளம் சிறந்து, பொதுமக்கள் நலமுடன் வாழவும், திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் நிறைவேற வேண்டியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனையொட்டி, சேந்தமங்கலம் சௌந்தரவல்லி அம்பாள் சமேத சோமேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.பின்னர், முன்னாள் நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் தலைமையில், கொமதேக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 1008 பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்ட 6 அடி உயர முருகன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இந்த பால்குட ஊர்வலம் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் திருக்கோவிலில் தொடங்கி, பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலை வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கலந்து கொண்டனர். வழியெங்கும் “கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷங்கள் முழங்கின.மேலும்,குதிரை ஊர்வலம், நாட்டுப்பசு அலங்காரம், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சிறுவர்-சிறுமிகளின் சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து, தத்தகிரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் நாமக்கல், முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், பொட்டணம், காளப்பநாயக்கன்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
