முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கான தொழில் துவங்கிட ரூ.10.35 லட்சம் மதிப்பிலான கடன்
பெரம்பலூர் மாவட்டம் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கான தொழில் துவங்கிட ரூ.10.35 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க வங்கியில் இருந்து அனுமதிக்கப்பட்ட ரூ10.35 லட்சம் கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் பயனாளிக்கு இன்று (20.08.2025) வழங்கினார். நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், கொளுத்தும் கோடையிலும், குளிரிலும், அல்லும் பகலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய்த்திருநாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க, இராணுவப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு ஊதியம் வழங்குதல், படைப் பணியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு அளித்தல், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு பொதுத்துறை சார்பில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை 20.8.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்களாகிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு வழங்கப்படும். இந்த கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு பணிக்குழு (District level Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. பின்னர் இவ்வங்கிகளால், விண்ணப்பம் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல் (Provisional Sanction) ஆணை வழங்கப்படும். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு பணிக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பெலிக்ஸ் மேரி க/பெ ஜஸ்டின் (முன்னாள் படை வீரர்) என்பவருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட ரூ.10,35,000 கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். ஆணையை பெற்றுக் கொண்ட, பெலிக்ஸ் மேரி அவர்கள் முன்னாள் படை வீரர்களுக்கு முதல்வர் தந்த திட்டங்களில் முத்தான திட்டமாக காக்கும் கரங்கள் திட்டம் உள்ளதாகவும், இதனால் என்னைப்போன்ற முன்னாள் படை வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை கூறுவதாக தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர்(பொ) கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள் படை வீரர்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



