நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 1066 நபர்களுக்கு சிகிச்சை

பெரம்பலூர் மாவட்டம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ அறிக்கைகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (23.08.2025) பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் தொடர்பாக கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த 04 நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும் 05 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 02 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினையும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். இம்மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் துங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02.08.2025 அன்றும், அதனைத்தொடர்ந்து ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 08.08.2025 அன்றும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (23.08.2025) எசனை அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. துங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 707 நபர்களும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 890 நபர்களும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக உடனடியாக முகாமிலேயே வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமினை பார்வையிட்ட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் முகாம் பயனுள்ளதாக உள்ளதா என்றும், மருத்துவ சேவைகள் சிறப்பாக வழங்கப்படுகிறதா என்றும், தாங்கள் எவ்வித சிகிச்சைக்காக வந்துள்ளீர்கள் என கேட்டறிந்து அது தொடர்பான மருத்துவ சிகிச்சை வழங்கிடுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவு பகுதிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

