குழந்தை தொழிலாளர் குறித்து 1098ல் புகார் அளிக்கலாம்

X
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தா.ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஆகிய பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 151நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும் 14 வயது நிறைவடைந்த ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் வேலையளிப்பவருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டணையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் அமைப்பை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் அலுவலகத்தின் 04362-264886 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் செய்யலாம்.
Next Story

