ஓட்டப்பிடாரம் அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!

X
Ottapidaram King 24x7 |3 Dec 2025 9:04 PM ISTஓட்டப்பிடாரம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 11பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஜெயசித்ரா (42). இவர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி கலந்து விட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்கு சாலை பெருமாள் கோவில் அருகே கார் வந்தபோது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். இதனிடையே சின்னசேலம் அருகே உள்ள காலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி தனியார் வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை காலக்குறிச்சி கேசவன் நகரை சேர்ந்த ஆஷிப் (37) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். வேன் மிக வேகமாக வந்ததால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காரை கவனிக்காமல் பின்னால் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் காரின் இருந்த ஜெயசித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், வேனில் இருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
