மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி மற்றும் ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சரசு திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகையை ரூ.1,500/- ஆக உயர்ந்தி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலி கருவிகள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணைகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்களை நடத்தி அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்கள், மருத்துவ காப்பீடு அட்டை, உதவித்தொகை பெற அடையாள அட்டை மிகவும் அவசியம். எனவே, அடையாள அட்டை இல்லாதவர்கள் முகாம்களில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் விதமாக அனைத்து வட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2,780/- மதிப்பில் காதொலிக்கருவிகள், ரூ.9,350/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி, ரூ.9,050/- மதிப்பில் மூன்று சக்கர நாற்காலி, ரூ.6,840/- மதிப்பில் தையல் இயந்திரம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.85,000/- மதிப்பில் தனிநபர் கடன் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இன்றைய தினம் நடைபெறும் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளின் உடல் தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை நிபுணர் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வருகை தந்துள்ளார்கள். இம்முகாம்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் 25 மாற்றுத்திறனாளிகள் புதிய தேசிய அடையாள அட்டைக்கும், 15 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை புதுப்பிக்கவும் விண்ணப்பித்துள்ளார்கள். இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜானகி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story