தமிழகத்திலேயே முதல்முறை: 116 மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

தமிழகத்திலேயே முதல்முறை: 116 மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
தமிழகத்திலேயே முதல்முறையாக விளாத்திகுளத்தில் அதிக அளவில் கலந்து கொண்ட 116 ஜோடி மாடுகள் பங்கேற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, திரையுலக முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது.  இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, கம்பம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, போடி, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 116 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. பந்தயத்தில் மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று சீறிப்பாய்ந்து முந்தி செல்லும் காட்சிகளை சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்று வருகிறது, ஆனால் அதிகப்படியாக 65 முதல் 70 ஜோடி மாடுகள் மட்டுமே இதுவரை போட்டியில் கலந்து கொண்டன. ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் மட்டும்தான் 116 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன என்று விழா ஒருங்கிணைப்பாளர் குருராஜ் மற்றும் எல்கைப்பந்தய சங்கத்தினர் கூறியுள்ளனர்.
Next Story