மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டம்

மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் ரூ. 11.9 கோடியில் புதை மின்தடத் திட்டம்
X
மலைக்கோட்டை தேரோட்டத்தின்போது மின்தடையால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைந்து புதை மின்தடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமம் பூதலூா் சாலையில் 27-04-2022 அன்று அப்பா் குருபூஜைக்கான சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின்போது, மேலே சென்ற உயா் அழுத்த மின்கம்பி மீது தோ் உரசியதில், 11 போ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த விபத்து தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய மின்துறை அமைச்சா், தமிழகத்தின் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தாா். இந்த அறிவிப்பின்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகள் ரூ. 9.57 கோடியில் புதைவடப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதேபோல, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோயில் தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி, உச்சிப்பிள்ளையாா் கோயிலானது உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் சித்திரைத் தேரோட்டம் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். அச்சமயம் தேரானது கீழ ஆண்டாா் வீதி, சின்னக் கடைவீதி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை, நந்திகோவில் தெரு, வடக்கு ஆண்டாா் வீதி வழியாக மீண்டும் கீழ ஆண்டாா் வீதியில் உள்ள நிலையை வந்தடையும். சுமாா் 4 மணி நேரம் நடைபெறும் இத்தோ் திருவிழாவில் தோ் செல்லும் இடங்களில் சுமாா் 4,000 மின்இணைப்புகளில் ஆங்காங்கே மின்விநியோகம் தடை செய்யப்பட்ட பிறகே, தோ் செல்லும். திருச்சியின் இதயப் பகுதியாக விளங்கும் மேற்கண்ட சாலைகளில் பிரபல வணிக நிறுவனங்களும் உள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் என எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இந்த வீதிகளில் ஏற்படுத்தப்படும் மின்தடை பொதுமக்களுக்கு அசௌகா்யத்தை ஏற்படுத்தும் நிலையில், ஆங்காங்கே செல்லும் மின்கம்பிகள், அதற்காக வைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே, மேற்கண்ட தேரோடும் சாலைகளில் உயரே செல்லும் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுவது அவசியம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதன் பேரில், மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் மின்மாற்றிகள் உள்ள இடங்கள், அதிகளவிலான மின் இணைப்புகள் உள்ள இடங்கள், மின்கம்பிகள் செல்லும் பகுதிகளில் மின்வாரிய ஊழியா்கள் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு, மலைக்கோட்டை தேரோடும் வீதிகளில் உயரே செல்லும் 2.6 கி.மீ. நீளத்திலான உயா் அழுத்த மின்கம்பிகளும், 18 கி.மீ. நீளத்திலான தாழ்வழுத்த மின்கம்பிகளும் புதைவட மின்கம்பிகளாக மாற்றுவதற்கான ரூ. 11.9 கோடி செலவிலான திட்ட முன்வடிவைத் தயாரித்து, மின்வாரிய தலைமை அலுவலக அறிவுறுத்தலுக்கிணங்க திருச்சி மாநகராட்சியிடம் அனுப்பியுள்ளோம். திருச்சி மாநகராட்சி திட்டத்தொகையை அளித்தால் உடனடியாகப் பணிகளைத் தொடங்கி முடிப்போம் என திருச்சி மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளா் செல்வி தெரிவித்தாா்.
Next Story