திருக்கோவில்கள் சார்பாக 12 ஜோடிகளுக்கு திருமணம்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்றையதினம் (14.02.2025) இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் திருமண விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் 12 இணைகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திருமணங்களை நடத்தி வைத்தார். பின்னர் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் பாராட்டிற்குரியதாகவும் போற்றுதலுக்குரியதாகவும் திகழ்கிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் திருக்கோவில்களில் திருப்பணிகள், தேர் திருவிழாக்கள், இணைகளுக்கு திருமணங்கள் என பல்வேறு பணிகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பீட்டில் சீர்வரிசைகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதேபோன்று, இவ்வாண்டும் 700 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் ரூ.10,000/- உயர்த்தி 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பீட்டில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைத்திட 2024-2025-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பு எண்.27-ன் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிவகங்கை இணை ஆணையர் மண்டலத்தில் 35 இணைகளுக்கு திருமணம் நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக கடந்த 21.10.2024 அன்று 21 இணைகளுக்கு காளையார்கோவில் வட்டம், அரியாகுறிச்சி, அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலிலும், 1 இணைக்கு இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலிலும் மற்றும் கடந்த 10.02.2025 அன்று 1 இணைக்கு திருப்புவனம் வட்டம், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் என ஆக மொத்தம் 23 இணைகளுக்கு உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில்கள் செலவில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் 12 இணைகளுக்கு சிவகங்கை நகர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட இணைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோர் வருகை புரிவதற்கு ஏதுவாக, பேருந்துகள், திருமாங்கல்யம், சீர்வரிசை பொருட்கள் உட்பட செலவினங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் நிர்வாகத்தினரால் நடத்திட இந்து சமய அறநிலையத்துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டு, அதன்படி, இந்நிகழ்ச்சியின் வாயிலாக இன்றையதினம், 12 இணைகளுக்கு திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், கைக்கடிகாரம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மிக்சி, குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, குக்கர், கேஸ் ஸ்டவ், 10 கிலோ அரிசி சிப்பம், பூஜை பொருட்கள் மற்றும் சீர்வரிசை பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் திருக்கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கோயில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஏழை எளிய மற்றும் சாமானிய மக்களுக்கும் பயனுள்ள வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொலைநோக்குப் சிந்தனையுடன் புதிதாகவும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, தமிழக மக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். மேலும், இன்றையதினம் இத்திட்டத்தின் மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள மணமக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று, வளம் பெற மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் புவனேஷ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துணைத்தலைவர் கார்கண்ணன், அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ரம்யா தனசேகரன், மடப்புரம், அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் கணபதி முருகன், இராமநாதபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஞானசேகரன், அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து மற்றும் அனைத்து செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், திருக்கோவில் பணியாளர்கள், மணமக்கள், மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

