கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Chennai King 24x7 |18 Dec 2024 7:06 AM GMT
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை பகுதியில் உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவக் குடியிருப்பை சார்ந்த பஞ்சாயத்தார்களிடம் குறைக்கேட்பு முகாம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா, மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய குப்பங்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் தடைபட்டாலும், மீண்டும் அப்பணி நடைபெற தொடங்கியுள்ளது. ஊரூர் குப்பத்தில் பாதாள சாக்கடையின் உள்ள குழாய்கள் சிறிய அளவில் உள்ளதால், அதனை பெரிய அளவிலான குழாய்களாக மாற்றும் பணிகள் ஜனவரி மாதத்துக்கு பிறகு நடைபெறவுள்ளது. இந்த 13 மீனவ கிராமங்களின் பிரத்யேக கோரிக்கை என்பது நலவாரியம், பட்டா போன்றவைதான். சென்னை முழுவதும் பட்டா வழங்குவதற்கு துணை முதல்வர் தலைமையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கிராமநத்தம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
Next Story