பின்னோக்கி ஓடி அரியலூர் இளைஞர் சாதனை 13.54 செகண்டில் ஓடியது உடன் கின்னஸ் சாதனை படைப்பதாகவும் தகவல்.

X
அரியலூர், ஜூன்.25- பின்னோக்கி ஓடும் தடகள போட்டியில் உலக சாதனை படைத்த அரியலூர் இளைஞர்: 13.54 செண்ட்டில் ஓடி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றும் இதற்கு தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நிதியுதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.* அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகேயுள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் மகன் ஆறுபடைப்யப்பா(24) பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்தார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை போன்று சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது. உசேன் போல்ட் முன்னோக்கி ஓடி சாதனை படைத்தது போன்று இல்லாமல், நாம் பின்னோக்கி ஓடி சாதனை படைத்தால் என்ன என்று இவரது மனதுக்குள் தோன்றியது. தொடர் பயிற்சி காரணமாக பின்னோக்கி ஓட ஆரம்பித்த ஆறுபடையப்பா பயிற்சியின் போது பலமுறை விழுந்து, எழுந்து காயம் பட்டுள்ளார். ஆனாலும் மனம் தளராத ஆறுபடையப்பா தனது விடாமுயற்சியை கைவிடாமல் பின்னோக்கி ஓடுவதை நிறுத்தவில்லை. இதன் பயனாக பஞ்சாப் இந்தியன் நேஷ்னல் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் 14.40 வினாடியில் 100 மீட்டரை பின்னோக்கி ஓடி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் உலக சாதனையில் இடம்பெறும் வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் லயனிஸ் வேர்ல்டு ரெக்கார்ட் குழு சார்பில் போட்டி நடைபெற்றது. லேனிஷ் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற 100 மீட்டர் பின்னோக்கி ஓடும் போட்டியில் ஆறுபடையப்பா 13.54 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆறுபடையப்பா முதல் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கையில்:- ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போன்று தாமும் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று பயிற்சி செய்தேன். முன்னோக்கி ஓடாமல் பின்னோக்கி ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. தற்போது 100 மீட்டர் பின்னோக்கி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் உலக அளவில்மற்றும் இந்திய அளவில் முதல் இடத்திலும் உள்ளேன். தற்போது உலக சாதனை படைத்து அடுத்தபடியாக கின்னஸ் ரெக்கார்டில் வெற்றி பெற வேண்டும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று நிச்சயம் வெற்றி பெறுவேன். ஆனால் எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால், என்னால் தொடர் பயிற்சி செய்வதற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகிறது. உலக அளவில் உள்ள போட்டியில் பங்கேற்ற வேண்டும் என்றால் நிறைய நிதியுதவி தேவைப்படுகிறது. தமிழக முதல்வரை பலமுறை சந்திக்க முயற்சி செய்தும் என்னால் சந்திக்க முடியவில்லை என்றார். இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதற்காக உயிரை பணயம் வைத்து புறப்பட்டு இருக்கும் ஆறு படையப்பாவின் கனவு நிறைவேறுமா? இவரது கனவு நிறைவேற வேண்டுமென்றால் இவரது தொடர் பயிற்சிக்கு, அரசு நிதியுதவியும், ஊக்கத்தையு தர வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story

