தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 13,582 வழக்குகளில் ரூ.12.99 கோடிக்கு தீர்வு

X
தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 582 வழக்குகளில் ரூ. 12.99 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். குடும்ப நல நீதிபதி என். சாந்தி, கூடுதல் சார்பு நீதிபதி எம்.நாகப்பன், வழக்குரைஞர் ஏ.பாரதி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி.நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி பி.குமார், வழக்குரைஞர் கே.உஷாராணி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. போக்சோ வழக்கு நீதிமன்றச் சிறப்பு அமர்வு மாவட்ட நீதிபதி ஜெ.தமிழரசி, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி பி.அல்லி, வழக்குரைஞர் இ.அகஸ்டின் அமல்ராஜ் ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் உரிமையியல் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 365 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 13 ஆயிரத்து 582 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 563 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்ட 59 நாட்களில் தீர்வு காணப்பட்டு விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 16.40 லட்சம் பெற்றுத் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் திராவிடச் செல்வன், செயலர் அருண்குமார், வழக்குரைஞர்கள் கோ.அன்பரசன், கிருஷ்ணசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

