ஏலச்சீட்டு நடத்தி ரூ.14 லட்சம் மோசடி செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

X
சேலம் மாநகர ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஏலச்சீட்டு தொடங்கி நடத்தி வந்தார். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அப்போது வரவேற்பாளராக பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகாம்பாள் ஏலச்சீட்டில் சேர்ந்தார். இவர் 2012 முதல் 2019-ம் ஆண்டு வரை மாத தவணைகள் மூலம் ஏலச்சீட்டில் ரூ.40 லட்சம் கட்டி உள்ளார். பின்னர் ஏலச்சீட்டில் கட்டிய பணத்தை தரும்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் பலமுறை கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லோகாம்பாள், கடந்த 2024-ம் ஆண்டு போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபுவிடம் புகார் கொடுத்தார். புகார் குறித்து விசாரணை நடத்தும் படி அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் கீதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கலின் முடிவில், ரூ.14 லட்சம் லோகாம்பாளுக்கு தரவேண்டியது தெரியவந்தது. ஆனால் பாஸ்கரன் கடந்த மாதம் வரை பணம் தரவில்லை. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபுநபுவிடம் வழங்கினர். இந்த நிலையில் பண மோசடி செய்தது, அரசு ஊழியர் வருவாயில் ஈடுபடும் வகையில் ஏலச்சீட்டு நடத்தியது ஆகிய குற்றத்திற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.
Next Story

