ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கௌசிக் கண்ணன் ( 14 ) என்ற மாணவர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் கௌசிக் கண்ணன் ( 14 ) என்ற மாணவர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்க பாளையம் தெருவை சேர்ந்தவர் கதிரவன். நூற்பாலை தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் காயத்ரி மற்றும் கௌசிக் கண்ணன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கௌசிக் கண்ணன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மற்றவர்களிடம் சாதாரணமாக பழகுவதில்லை எனக் கூறப்படுகிறது. இன்று மாலை தந்தை வேலைக்கு சென்று இருந்த நிலையில், தாயும் மகளும் கடைக்கு சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது கௌசிக் கண்ணன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தந்தை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த தெற்கு காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

