இரட்டைக் கொலையில் 14 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம் !

கோவில்பட்டியில் நடைபெற்ற இரட்டைக் கொலையில் 14 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம் !
கோவில்பட்டி இரட்டை கொலையில் சிறுவன் உள்பட 14 பேர் கைது அடிக்கடி எங்களின் பாதையில் குறுக்கிட்டதால் பிரகதீஸ்வரனை தீர்த்துக்கட்டினோம் நண்பர் கொலைக்கு பழிக்குப்பழியாக சதீஷ் மாதவனின் தாய் கஸ்தூரியை வெட்டிக் கொலை செய்தோம் கோவில்பட்டி இரட்டை கொலையும் இருதரப்பும் பரபரப்பு வாக்குமூலம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ஆனந்த் மகன் பிரகதீஸ்வரன் (20). செண்பகாநகர் 3வது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி கஸ்தூரி (48) ஆகியோர் கடந்த 1ம்தேதி இரவு அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் டிஎஸ்பிக்கள் கோவில்பட்டி ஜெகநாதன், விளாத்திகுளம் அசோகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பிரகதீஸ்வரனை வெட்டிக் கொலை செய்த கோவில்பட்டி செண்பகா நகர் 3வது தெருவைச் பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன் (26), சிந்தாமணி நகர் 2வது தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் செல்லத்துரை (26), வ.உ.சி.நகர் சிங்கராஜ் மகன் விக்னேஷ் (24), புதுக்கிராமம் முகமது சாலிங்காபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் மதன்குமார் (20), வடக்குத்திட்டங்குளம் பாண்டி மகன் கனகராஜ் (24), செண்பகவல்லி நகர் லட்சுமணன் மகன் அர்ஜுன் (24), சிந்தாமணி நகர் சக்திவேல் மகன் சுரேஷ் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். பிரகதீஸ்வரனை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் சதீஷ் மாதவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நானும் எனது நண்பர்களும் வள்ளுவர் நகர் சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்துவோம். ஆனால் எங்களை அங்கு மது அருந்த கூடாது என்று பிரகதீஸ்வரன் அவரது தந்தை ஆனந்த், அவர்களது தாத்தா ரத்தினம் ஆகியோர் கண்டித்ததோடு அவதூறாக பேசினர். இதுதொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன் பிரகதீஸ்வரனின் நண்பர் திருமணம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள மண்டபத்தில் நடந்தது. இதற்காக பிளக்ஸ் போர்டு வைத்திருந்தார்கள். அந்த பிளக்ஸ் போர்டை யாரோ கிழித்து சேதப்படுத்தி விட்டனர். ஆனால் பிரகதீஸ்வரனும் அவரது நண்பர்களும் நாங்கள் தான் பிளக்ஸ்போர்டை சேதப்படுத்தினோம் என்று கூறி எங்களிடம் வந்து கேட்டனர். அதற்கு நாங்கள் பிளக்ஸ்போர்டை சேதப்படுத்தவில்லை என்று கூறினோம். ஆனாலும் அவர்கள் நீங்கள் தான் சேதப்படுத்தினீர்கள் என்று கூறி எங்களிடம் தகராறு செய்தனர். இவ்வாறு அடிக்கடி எங்களின் பாதையில் குறுக்கிட்டதால் பிரகதீஸ்வரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அதன்படி கடந்த 1ம்தேதி இரவு கோவில்பட்டி - கடலையூர் ரோடு தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த அவரை நானும் எனது நண்பர்களும் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தோம். இதையறிந்த அவரது நண்பர்கள் என்னை தேடி எனது வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு நான் இல்லை. எனது தாய் கஸ்தூரியும், உறவினர் செண்பகராஜ் என்பவரும் இருந்தனர். அவர்களிடம் என்னை எங்கே என்று கேட்டு தகராறு செய்த பிரகதீஸ்வரனின் நண்பர்கள் எனது தாய் கஸ்தூரி மற்றும் உறவினர் செண்பராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் எனது தாய் இறந்து விட்டார். இவ்வாறு சதீஷ் மாதவன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் கஸ்தூரி கொலை வழக்கில் கோவில்பட்டி மறவர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கோகுலகிருஷ்ணன் (20), வள்ளுவர் நகர் வேல்முருகன் மகன் சரவணன் (20), கருப்பசாமி மகன் நாகராஜன் (20), சண்முக நகர் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (19), சாத்தூர் படந்தாள் பன்னீர்செல்வம் மகன் தங்கப்பாண்டி (21), முகமது சாலிகாபுரம் மாரிமுத்து மகன் பாலமுருகன் (21) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நண்பர் கொலைக்கு பழிக்குப்பழியாக சதீஷ் மாதவனின் தாய் கஸ்தூரியை வெட்டிக் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story