பிறந்து 14 நாள் ஆன பெண் குழந்தை மர்ம சாவு

X
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, சீரகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராம் இவரது மனைவி கஸ்தூரி (20) இவருக்கு கடந்த, 3.7.2025 அன்று நிலக்கோட்டை அருகே, எஸ்.தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்கு பின்பு தாய், குழந்தை ஆகியோர் நலமுடன் வீடு திரும்பினார். பின்னர், 11.7.2025 அன்னு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியைச் சேர்ந்த செவிலியர் கஸ்தூரி வீட்டிற்கு சென்று பெண் குழந்தையை பார்வையிட்டு நன்றாக இருப்பதாக பரிசோதித்து சென்றுள்ளார். இந்நிலையில், 14 நாட்களுக்குப் பிறகு கடந்த 15.7.2025 அன்று பெண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக, அக்குழந்தையை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பெண் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக, எஸ்.தும்மலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து, நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வருவாய்த்துறையினர் முன்னிலையில் அக்குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

