பஞ்சநதிக்கோட்டையில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 டன் நெல் கொள்முதல் செய்யும் வகையில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பஞ்சநதிக்கோட்டையில்  ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 டன் நெல் கொள்முதல் செய்யும் வகையில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X
கொள்முதல் நிலையம் திறப்பு
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 150 டன் நெல் கொள்முதல் செய்யும் வகையில், அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து சனிக்கிழமை வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் பஞ்சநதிக்கோட்டையில், அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், முதுநிலை மண்டல மேலாளர் நெ.செல்வம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தலைமை பொறியாளர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியது: தஞ்சாவூர் மாவட்டம் பஞ்சநதிக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் நெற்பயிர்களுக்காக சுமார் 3,000 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு காரிப் சீசனிலும் திறக்கப்படுகின்றன. அதில் 90 சதவீதம் டெல்டா மாவட்டத்திலேயே செயல்படுகின்றன. தற்போது ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 40 டன், 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உச்ச அறுவடை காலத்தில் இது தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே, கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சோதனை முறையில் பஞ்சநதிக்கோட்டையில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தின் மூலம்,  இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் நெல் வயலில் இருந்து நேரடியாக மூட்டை இல்லாமல் டிராக்டர், டிப்பர் மூலமாக நெல்லை அதிதிறன் கொள்முதல் நிலையத்தில் பெற முடியும். இதனால் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும்போது சாக்கு பயன்பாட்டை குறைக்கலாம். இதை சுத்தம் செய்யும்போது மாசுக்கட்டுப்பாடு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக சேகரிப்பு முனையிலிருந்து நெல் சுத்தம் செய்யப்படுகிறது.  தூசி சுத்தம் செய்து, ஈரப்பதம் சரிபார்க்கப்பட்டு,  நேரடியாக தானியங்கி எடை மற்றும் தானியங்கி பேக்கிங் மூலம் மூட்டையாக தைக்கப்பட்டு கன்வேயர் மூலம் லாரிக்கு ஏற்றப்படுகிறது. இதனால் விவசாயிகளின் நெல் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக எடையிடப்பட்டு, அதற்கு உண்டான பணப்பட்டுவாடாவும் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நெல் போக்குவரத்தை விரைவுப்படுத்த இவ்வாறான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த இயந்திரத்தின் கொள்ளளவு ஒரு மணி நேரத்துக்கு 15 டன் எடுத்துக்கொள்ளும். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் கொள்முதல் செய்யும் போது 150 டன் அதிவிரைவாக கொள்முதல் செய்யலாம்.  இதனால் விவசாயிகளில் காத்திருக்கும் நேரம் குறையும். விரைவில் தேவைப்படும் அனைத்து மாவட்டங்களிளும் அதிதிறன் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Next Story